இலவச வீட்டுமனைக்கான இடத்தில் ஆக்கிரமிப்பு; கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
விழுப்புரம்: திருவெண்ணெய்நல் லுார் அடுத்த மணக்குப்பம் முன் காலனி மக்கள், கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று காலை 11:30 மணியளவில், திருவெண்ணெய் நல்லுார் அடுத்த மணக் குப்பம் முன்காலனி பொது மக்கள் முற்றுகையிட்டனர். அங்கு பணியிலிருந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.அப்போது, தங்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கிட அரசு கையகப்படுத்திய இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வில்லை என தெரிவித்தனர்.மேலும், கடந்த 2ம் தேதி கலெக்டர் அலுவல கத்திற்கு, குறைகேட்புக் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தோம். அப்போது கலெக்டரை சந்தித்து எங்க ளது பிரச்னையை தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.மணக்குப்பம் முன்காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.இப்பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் 219 குடும்பத்தினருக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம்.பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை மனு அளித்ததின்பேரில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிட, அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது.இந்நிலையில், கடந்த 5ம் தேதி, அந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகின்றனர். எனவே அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, எங்களுக்கான வீட்டு மனையை முறைப்படி அளந்து, ஒப்படைக்க வேண்டும். இப்பிரச்னை மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.பாதுகாப்பு போலீஸ் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு சென்று, கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்துவிட்டுச் சென்றனர்.