முயற்சியும், பயிற்சியும் இருந்தால்தான் தற்போதைய போட்டி உலகில் வெல்ல முடியும் ஆச்சாரியா கல்வி நிறுவன தலைவர் பளீச்
விழுப்புரம் : 'மாணவர்களாகிய உங்களுக்கு வாழ்வில் எதுவும் ஓசியாகவும், சுலபமாகவும் கிடைத்து விடாது' என ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுனங்களின் தலைவர் அரவிந்தன் கூறினார்.விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர்-பட்டம்' மெகா வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்ற, அவர் பேசியதாவது:உங்களுக்கு உள்ளிருந்து வரும் குரல் வெறும் நாய்ஸ் தான். வெளியே கேட்கும் குரல் தான் வாய்ஸ். இதை மாணவர்களாகிய நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, அமைதி இருக்கும் இடங்களில் சரஸ்வதி என்ற கடவுள் குடியிருப்பாள். இதையும் கடந்தவர்களால் தான் பிரம்மாவாக வர முடியும்.ஒவ்வொரு பொருட்களையும் உருவாக்குவோர் அனைவருமே பிரம்மாதான். புதுப்புது யோசனைகளை தேடித்தேடி கண்டுபிடிப்போர் பிரம்மாவாக மாறுகிறார்கள். அறிவு நாளுக்கு, நாள் வளர்ந்து கொண்டே சென்றால்தான் புதிய கண்டுபிடிப்புகள் நமது மனதில் தோன்றும். முயற்சியும், பயிற்சியும் இருந்தால்தான் தற்போதைய போட்டி உலகில் நீங்கள் வெல்ல முடியும்.உங்களுக்கு வாழ்வில் எதுவும் ஓசியில் கிடைத்து விடாது. அரசாங்கமே உங்களுக்கு கொடுப்பது போல கொடுத்து, பின் வரி மூலம் அதையும் வாங்கி கொள்வர். வாழ்வில் நாம் மேலோங்கி வர சரஸ்வதி என்ற கல்வி அறிவை, புதுப்புது யோசனைகளோடு வளர்த்துக் கொள்ள வேண்டும்.பூமியில் விழும் விதைகூட மண்ணை முட்டி, மோதிதான் முளைக்கிறது. அது போல், நீங்களும் பல போட்டிகளைக் கடந்து தான் முன்னேற வேண்டும். உங்களிடம் நிறைய அறிவு மட்டுமின்றி, தகவல்களும் அதிகமாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் நீங்கள் மேலோங்கி வர முடியும்.தற்போது இந்த தகவல்களை மொபைல்போன் தருவதால், அந்த பொருள் மேலோங்கி எல்லோரின் கையிலும் உள்ளது. நீங்கள் திறமையோடு உலகை ஆள வேண்டும் என்றால், நிறைய புதுப்புது யோசனைகளை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.