வடக்கு பகுதிக்கு இவரு தான் அமைச்சர், கலெக்டர் எல்லாமே
செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியை அடுத்தடுத்து பறிகொடுத்தார். இதனால் 'அப்செட்' ஆகி இருந்த இவருக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி கிடைத்ததால், உற்சாகம் அடைந்துள்ளார். மீண்டும் அமைச்சர் பதவியை பெற தலைமையின் பார்வைக்காக காத்திருக்கிறார். மேலும், திண்டிவனம், மயிலம் ஆகிய ௨ தொகுதிகளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அங்கு நடக்கின்ற அரசு நிகழ்ச்சிகளிலும் இவரே முக்கிய விருந்தினராக பங்கேற்கிறார்.இதைப் பார்த்த ஆளுங்கட்சி தொண்டர்கள், 'மாவட்ட செயலாளர் பதவி வந்ததும், மீண்டும் அமைச்சரானதை போல, செஞ்சி எம்.எல்.ஏ., தெம்பாக வலம் வர ஆரம்பிச்சுட்டார்' என கமெண்ட் அடித்தனர். ஆக வடக்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை செஞ்சி, திண்டிவனம், மயிலம் ஆகிய தொகுதிகளுக்கு இவர் தான் முடிசூடா மன்னன். பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அமைச்சர், கலெக்டர் எல்லாமே இவருதான். அந்தளவு கீழ இருந்து மேல வரை அண்ணனுக்கு எல்லாமே அத்துப்படி, எல்லாரையும் அசத்திவிடுவார் என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.