10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு மரக்காணம் அருகே துணிகரம்
மரக்காணம் : மரக்காணம் அருகே கொள்ளுமேடு கிராமத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், 50; இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். கண்ணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின்பேரில், திருட்டு நடந்த வீட்டில் போலீசார் தடயங்களை சேகரித்தனர். கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்து, 2 பைக்குகளில் சந்தேகத்திற்கிடமாக சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.