வெள்ள நீரில் சிக்கி தவித்த 16 பேர் மீட்பு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 16 பேரை பேரிடர் மீட்பு படையினர் படகில் சென்று மீட்டனர் .விக்கிரவாண்டி பகுதியில் பெய்த புயல் மழை வெள்ளம் காரணமாக டோல் பிளாசா அருகில் உள்ள ஹைவே சிட்டியில் வீடு கட்டி வசித்த பூர்ணராவ், சங்கர், பாலு உள்ளிட்ட 5 குடும்பங்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர் .இது பற்றி தகவலறிந்த தாசில்தார், விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான வீரர்கள் ரப்பர் படகு மூலம் சென்று வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த 6 ஆண்கள் ஒரு வயது குழந்தை உட்பட 3 குழந்தைகள் 7 பெண்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர் . இதில் ஒரு குடும்பத்தினர் வைத்திருந்த இரு பசுமாடுகளை கயிற்றில் பிடித்து தண்ணீரில் அழைத்து வந்த போது வெள்ளத்தின் வேகத்தில் தண்ணீரில் இரு பசுமாடுகளும் அடித்து சென்றது.