உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., மாநில நிர்வாகிகள் 3 பேர் மயிலம் தொகுதிக்கு குறி

தி.மு.க., மாநில நிர்வாகிகள் 3 பேர் மயிலம் தொகுதிக்கு குறி

ம யிலம் சட்டசபை தொகுதியில், 'சீட்' பெற ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி ஆதரவுடன் பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் வெற்றி பெற்றார். அதே தொகுதியில் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வாக இருந்த டாக்டர் மாசிலாமணி 2021ல் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, பா.ம.க.,விடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர், கடந்த 1989ம் ஆண்டு முதல் 5 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு, இரு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது தலைமை தீர்மான குழு துணைத் தலைவராக உள்ளார். இதேபோல், திண்டிவனம் தொகுதியில் கடந்த 1996ம் ஆண்டு தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர் வழக்கறிஞர் சேதுநாதன். இதே தொகுதியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகத்தை எதிர்த்து 2001ம் ஆண்டு போட்டியிட்டபோது, வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனம் நகர மன்ற தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட இவரது மனைவி, கவுன்சிலர் தேர்தலில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சேதுநாதன், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மற்றும் மயிலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளராக உள்ளார். செஞ்சி தொகுதியில், கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டவர் சிவா. இதில், பா.ம.க., வேட்பாளரிடம் 2 ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தேர்தல்களில் தி.மு.க.,வில் 'சீட்' கிடைக்காத நிலையிலும், தொடர்ந்து கட்சி வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இவர், தி.மு.க., தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நல வாரிய உறுப்பினராக பதவி வகிக்கிறார். தி.மு.க., தலைமை தீர்மானக் குழுவில் இடம்பெற்றுள்ள மூவரும், மயிலம் தொகுதியில் சீட் பெற 'காய்' நகர்த்தி வருகின்றனர். இவர்களுடன் முன்னாள் மாவட்ட பொறுப்பாளரான சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலரும் நம்பிக்கையுடன் வலம் வருகின்றனர். இதற்கிடையே, மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். இதனால், மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடுமையான போட்டி நிலவும் என்ற பேச்சு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை