உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 3.5 லட்சம் மரக்கன்றுகள் பராமரிப்பு இன்றி... பாழ்; மாவட்டத்தை பசுமையாக்கும் திட்டத்திற்கு சிக்கல்

3.5 லட்சம் மரக்கன்றுகள் பராமரிப்பு இன்றி... பாழ்; மாவட்டத்தை பசுமையாக்கும் திட்டத்திற்கு சிக்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வனத்துறையின் பல்வேறு திட்டங்களின் மூலம் அளித்த 3.5 லட்சம் மரக்கன்றுகள் உரிய பராமரிப்பு இன்றி பாழானது. விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டமாக விழுப்புரம் இருந்தாலும், நிழல் தரும் மரங்கள் இல்லாத சற்று வரண்ட பகுதி. இதனால் மாவட்டத்தை பசுமையாக மாற்ற வனத்துறை சார்பில் ஆண்டு தோறும் மத்திய மாநில அரசு திட்டங்களின் மூலம் சாலையோரம், காலி இடங்களில் மரக்கன்று வைத்து பராமரிப்பதிற்கு, தனியார் நிறுவனங்கள், தன்னாவர்லர்கள், விவசாயிகள் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.வனத்துறையின் பசுமை இயக்கம், தமிழ்நாடு பல்லுாயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டம் மூலம் விவசாயிகள், தன்னார்வலர்களுக்கு மரக்கன்று வழங்கப்படுகிறது. காடுகளில் மரக்கன்று நட்டு பராமரிக்க, நபார்டு வங்கி நிதி உதவி அளிக்கிறது.மத்திய அரசின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடல் அரிப்பை தடுக்கவும், அலைகள் வேகத்தை கட்டுப்படுத்த, கடற்கரை ஓரங்களில் வளர்க்கும் மரக்கன்றுகளும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை (நகாய்) திட்டத்தின் கீழ், சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை எடுத்தால், ஒரு மரத்திற்கு பத்து மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வனத்துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான மரக்கன்றுகளையும் வனத்துறை வழங்குகிறது. இதுதவிர கேசுவரீனா, பனை மரம் கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2021 - 22ம் ஆண்டு மட்டும், விழுப்புரம் மாவட்ட வனத்துறை பசுமை இயக்கம் மூலம் 50 ஆயிரமும், 2022 - 23ம் ஆண்டு விவசாய நிலங்களின் பசுமை தரத்தை அதிகரிக்கும் நிலையான திட்டத்தின் மூலம் 5.25 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இதுபோல், 2023 - 24ம் ஆண்டு பசுமை இயக்கத்தில் 3.88 லட்சமும், பல்லுயிர் பாதுகாப்பு பசுமை திட்டத்தில் 2.34 லட்சம், நபார்டு வங்கி நிதி உதவி மூலம் 2.61 லட்சம், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.2024 - 25ம் ஆண்டு ஆண்டு பசுமை இயக்கத்தின் கீழ் 80 ஆயிரம் கன்றுகளும், பல்லுாயிர் பாதுகாப்பு திட்டத்தில் 2.79 லடசம், நகாய் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கன்றுகளும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் கன்றுகளும், கடற்கரை ஓரங்களுக்கான கேசுவரீனா கன்றுகள் 30 ஆயிரமும், பனை மரம் 10 ஆயிரம், சிப்காட் பகுதிக்கு 30 ஆயிரம் கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 60 ஆயிரம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கி உள்ளனர். இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 14.2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தும் தற்போது உயிருடன் செழித்து வளர்கிறதா என்றால் கிடையாது.விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வழங்கிய பல லட்சம் மரக்கன்றுகள் போதிய பராமரிப்பின்றி அழிந்து விட்டது. இதனால் வனத்துறையின் பசுமையாக்கும் திட்டம் நிறைவேற்ற முடியாமல், வறட்சி பூமி போல காட்சி அளித்து வருகிறது.வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது; விழுப்புரம் மாவட்டத்தை பசுமையாக மாற்ற பல்வேறு திட்டங்களின் கீழ் வனத்துறை, விவசாய நிலங்களுக்கும், தொழிற்பேட்டை, தன்னார்வலர்கள் என பல தரப்பினருக்கும் மரக்கன்றுகளை வழங்குகிறது. பெரும்பாலான விவசாயிகள், தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை சரியான முறையில் பராமரிப்பதில்லை. தண்ணீர் ஊற்றாமல், கன்றுகளுக்கு கூண்டு வைத்து பராமரிக்காததால் கால்நடைகள் மூலம் வீணாகிறது. இதனால், மாவட்டத்தில் வனத்துறை மூலம் வழங்கிய மரக்கன்றுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 3.50 லட்சம் கன்றுகள் வீணாகியுள்ளது. இந்தாண்டு பராமரிப்பின்றி வீணாக்கப்படும் மரக்கன்றுகளின் சதவீதத்தை குறைக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை