விழுப்புரம் மாவட்டத்தில் 67 மினி பஸ் சேவை துவக்கம்; புதிய வழித்தடத்தில் 17 பஸ்கள் இயக்க ஏற்பாடு
தமிழக அரசு கிராமப்புற பகுதிகளுக்கு புதிய வழித்தடங்களுக்கான பஸ் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி புதிய விரிவான மினி பஸ் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் போக்குவரத்து துறை சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், புதிய விரிவான மினி பஸ் இயக்கும் திட்டத்தினை நேற்று துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், விழுப்புரம் மாவட்டத்திற்கான முதல் கட்ட மினி பஸ் சேவை துவங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மஸ்தான், லட்சுமணன் பங்கேற்று, புதிய விரிவான மினி பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.விழாவில் எஸ்.பி., சரவணன், சப் கலெக்டர் வெங்கடேஷ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அருணாச்சலம், முக்கண்ணன், போக்குவரத்து ஆய்வாளர்கள் கோவிந்தராஜி, முருகவேல், முருகேசன் உட்பட அலுவலர்கள், மினி பஸ் உரிமையாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், ஏற்கனவே 69 மினி பஸ்கள் இயங்கி வந்தது. தற்போது அது புதுப்பிக்கப்பட்டு, புதிய விரிவான மினி பஸ் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.அனுமதி கோரி காத்திருந்த உரிமையாளர்களுக்கு, மினி பஸ் இயக்குவதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. முதல் கட்டமாக விழுப்புரம் தாலுகாவில் 20 மினி பஸ்களும், திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் 2, திருக்கோவிலூர் தாலுகாவில் 7, விக்கிரவாண்டி தாலுகாவில் 2, கண்டாச்சிபுரம் தாலுகாவில் 2, திண்டிவனம் தாலுகாவில் 16, செஞ்சி தாலுகாவில் 11, மேல்மலையனுார் தாலுகாவில் 5, மரக்காணம் மற்றும் வானுாரில் தலா 1 பஸ் வீதம் மொத்தம் 67 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. விழுப்புரம் வட்டாரத்தில் 33 மினி பஸ்களும், திண்டிவனம் வட்டாரத்தில் 34 மினி பஸ்களும் இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் 7, திண்டிவனத்தில் 10 மினி பஸ்களும், புதிதாக ஏற்படுத்தப்பட்ட வழித்தடத்தில் இயங்க உள்ளது.இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்கள், குறைந்த செலவில் எளிதில் நகர்ப்புறத்தை அடைவதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதிதாக மினி பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.