அரசு பள்ளிகளில் 756 தற்காலிக ஆசிரியர்கள்... நியமனம்; பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரவல்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 756 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்து நிரப்பப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,295 அரசு பள்ளிகள், 282 தனியார் பள்ளிகள், 196 அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள், 23 பகுதிநேர நிதியுதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 1,796 பள்ளிகள் உள்ளது. இதில், 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்த விழுப்புரம், தற்போது படிப்படியாக அரசு பொதுத்தேர்வுகளில் முன்னேறி வருகிறது. மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை மேலும் உயர்த்த மாவட்ட நிர்வாகம், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், மாவட்டத்தில் 27 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 21 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 66 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 208 முதுநிலை ஆசிரியர்கள், 537 பட்டதாரி ஆசிரியர்கள், 11 இளநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்ப பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தினார். அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., மூலம், பள்ளி மேலாண்மை குழு, அப்பள்ளி தலைமை ஆசிரியர் இணைந்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக இருந்த முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள், பள்ளி மேலாண்மை குழு மூலம் தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளனர்.காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, அந்தந்த பள்ளிகளில் உள்ள உதவி தலைமை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பொறுப்பு வகிக்க கல்வித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து சி.இ.ஓ., அறிவழகன் கூறுகையில், 'தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில், காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு மூலம் வரும் ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் நியமனம் செய்யப்படுவர். விரைவில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும்' என்றார்.