உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுதந்திரத்திற்கு முன் துவங்கிய நகராட்சி பள்ளி விழுப்புரத்தில் 86 ஆண்டு கால கல்விச்சேவை

சுதந்திரத்திற்கு முன் துவங்கிய நகராட்சி பள்ளி விழுப்புரத்தில் 86 ஆண்டு கால கல்விச்சேவை

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் துவங்கப்பட்ட, விழுப்புரம் நகராட்சி துவக்கப்பள்ளி 86 ஆண்டுகளாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலையில், கடந்த 1939ம் ஆண்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியால் சுற்று வட்டாரப்பகுதியில் வசிக்கும் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் மிகுந்த பயனடைந்தனர். ஆரம்பத்தில், 100 க்கும் குறைவாக இருந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.கடந்த 2011ம் ஆண்டு பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியபோது, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் துவக்கப்பள்ளி தொடர்ந்து 200 மாணவர்களுடன் தனியாக செயல்படத் துவங்கியது. தற்போது துவக்கப்பள்ளியில் ஏறக்குறைய 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை பகுதியைச் சேர்ந்த மாணவி பூஜா, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் பயின்று வருகிறார். இதே பள்ளி மாணவரான விழுப்புரம் வண்டிமேடு அடுத்த ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த ஹரீஷ், சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில் பயின்று வருகிறார். கடந்த 86 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், இந்த நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பலரும் உயர்கல்வி பயின்று, பல்வேறு அரசு பணிகளில் உள்ளனர்.

38 ஆண்டுகால பணி

விழுப்புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், கடந்த 2017ம் ஆண்டு தலைமை ஆசிரியராக கீதா பதவி ஏற்றார். அப்போது, 200 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை தற்போது 300 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 1988ம் ஆண்டு விருத்தாசலம் நகராட்சி துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தனது கல்வி பணியை துவக்கினார். கடந்த 2005 ம் ஆண்டு விழுப்புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, தலைமை ஆசிரியர் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து 38 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ள இவர், மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்கிட ஊக்கப்படுத்தி வருகிறார். இப்பள்ளியில், நகராட்சி சார்பில் ஏற்கனவே 2 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளது. இந்நிலையில், கல்வித்துறை மூலம் கூடுதலாக ஒரு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் கீதா தெரிவித்தார்.

சீனியர் ஆசிரியர் கோமதி

இப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோமதி, தொடர்ந்து 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கிட, தீவிரமாக பணியாற்றி வருகிறார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக நகராட்சி பள்ளி மாணவர்களும் சிறந்து விளங்கிட தொடர்ந்து பணியாற்றுவேன் என ஆசிரியர் கோமதி, நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

விளையாட்டில் சாதனை

விழுப்புரத்தைச் சேர்ந்த மல்லர் கம்ப பயிற்சியாளர் ஆதித்தன், இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முறைப்படி பயிற்சி அளித்து வருகிறார். இவர் கூறுகையில், இப்பள்ளியில் பயின்ற மாணவர் ேஹமச்சந்திரன், தற்போது அரசு கல்லுாரியில் பயின்று வருகிறார்.இவர் உத்திரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய மல்லர் கம்ப குழு போட்டி, தனித்திறமை கயிறு மல்லர் கம்பம் மற்றும் தொங்கு மல்லர் ஆகிய 3 போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இவர், நகராட்சி துவக்கப் பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதே பள்ளி மாணவி பிந்துஸ்ரீ, பீகாரில் நடைபெற்ற தேசிய அளவிலான கேலோ இந்தியா மல்லர் கம்ப போட்டியில், தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு சாதனை படைத்தார். இப்பள்ளி மாணவ, மாணவிகள் பலரும், விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர் என தெரிவித்தார். இந்த பள்ளியில், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, மொத்தம், 8 பெண் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை