உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம் : தகுதியிருந்தும் அங்கன்வாடி பணியாளர் வேலை வழங்காமல் புறக்கணிப்பதை கண்டித்து, மாற்றுத்திறனாளி குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. செஞ்சி அடுத்த எடமலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; மாற்றுத்திறனாளி. இவரது மனைவி லட்சுமி, 34; இவர்கள், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 7; 4; 2; வயது மகள்களுடன் மனு அளிக்க வந்தனர். அப்போது திடீரென அலுவலக வாயில் பகுதியில் குழந்தைகள், மனைவி மற்றும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். உடன் அங்கிருந்த தாலுகா போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். போலீஸ் விசாரணையில், வெங்கடேசன் கூறுகையில்,'நான் கால்கள் பாதித்த மாற்றுத் திறனாளி, என்னால் வேலைக்கு செல்ல முடியாமல், குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளேன். அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, எனது மனைவி லட்சுமி விண்ணப்பித்து, கடந்த ஜூன் மாதம் நேர்முகத்தேர்விலும் பங்கேற்றார். உரிய கல்வி தகுதி, மாற்றுத்திறனாளி மனைவி, கலப்புத்திருமணம் என முன்னுரிமை தகுதிகள் இருந்தும், விதிகளை மீறி வேறு நபருக்கு அங்கன்வாடி பணியாளர் பணியை வழங்க முடிவு செய்து, இழுத்தடிக்கின்றனர். 3 பெண் குழந்தைகளுடன், வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறோம். அங்கன்வாடியிலிருந்து, விதிகள்படி 2 கி.மீ., தொலைவிற்குள் தான் எங்கள் வீடும் உள்ளது. இதனால், எங்களின் நிலையை அறிந்து, தகுதியுடைய எங்களுக்கு அங்கன்வாடி பணியாளர் வாய்ப்பை வழங்க வேண்டும்' என்றார். இதனையடுத்து, அவரது மனுவை பெற்ற அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை