உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரும்பு கம்பி லோடு லாரியில் நுாதன திருட்டு; பல ஆண்டுகள் நடந்த டீல் கண்டுபிடிப்பு

இரும்பு கம்பி லோடு லாரியில் நுாதன திருட்டு; பல ஆண்டுகள் நடந்த டீல் கண்டுபிடிப்பு

நீண்ட துாரம் சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் ஓய்வு எடுப்பதற்காக, சென்னை-திருச்சி சாலையில், பல இடங்களில் லே-பை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, லாரியை ஓரமாக நிறுத்தி ஓட்டுநர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். ஓய்வு எடுக்கும் நேரத்தில் லாரியில் உள்ள இரும்பு கம்பிகளை ஒரு கும்பல் தொடர்ச்சியாக திருடி வந்தது.லாரி டிரைவர்களின் உடந்தையுடன் நடக்கும் திருட்டு சம்பவங்கள், சம்பந்தப்பட்ட இடத்தின் போலீசாருக்கு தெரிந்தும், மாதாந்திர வசூல் காரணமாக கண்டும், காணாமல் இருந்து வந்தனர். லாரியில் கொண்டுவரப்படும் இரும்பு கம்பிகளை, குறைந்த விலைக்கு வாங்க நெடுஞ்சாலை லே பை பகுதிகளை இரும்பு வியாபாரிகள் முற்றுகையிட்டு காத்திருப்பது தொடர் கதையாக இருந்தது.இரும்பு வியாபாரிகளுடன் டீல் வைத்த சில லாரி டிரைவர்கள், லேபையில் இரவு நேரத்தில் லாரியை நிறுத்திய உடன், இரும்பு வியாபாரி லாரியில் உள்ள இரும்பு கம்பிகளை, சங்கிலி மூலம் இணைத்து வேறு ஒரு லாரி மூலம் கீழே இழுத்து விடுகின்றனர். பின்பு இரும்பு கம்பிகளை அருகிலுள்ள எடைபோடும் நிலையத்திற்கு கொண்டு சென்று, எடைபோட்டு, ஒரு கிலோ கம்பி ரூ.40 முதல் ரூ. 45 வரை விலைக்கு விற்பனை செய்துவிடுகின்றனர்.அதற்கான பணத்தை லாரி டிரைவர்கள் கூகுள்பே மூலம் பெற்று கொள்கின்றனர். இரும்பு வியாபாரிகள் அந்த கம்பிகளை ரூ.70 லிருந்து ரூ.75 வரை கூடுதல் விலை வைத்து, சிறிய கடைகள், குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டும் பொது மக்களுக்கும் விற்று கூடுதல் லாபம் பார்த்துவிடுவார்கள். இதே போல் திண்டிவனம் அருகே உள்ள லேபையில் தொடர்ந்து, இரும்பு கம்பிகளை, சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் உடந்தையுடன் திருடி லட்சக்கணக்கில் பணம் பார்க்கும் கும்பல் 2 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வந்தது. சம்பந்தபட்ட போலீசாருக்கு தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வந்தனர். இரும்பு கம்பிகளை திருடும் கும்பலை விழுப்புரம் எஸ்.பி.,யின் தனிப்படையினர், கூண்டோடு கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.தனிப்படை போலீசார் கூறுகையில்; இரும்பு கம்பிகள் தனியார் ஹார்டுவேர் கடைக்கு சென்றால், லோடு எடை போட்ட பின்னர் தான் கடைக்குள் அனுமதிப்பார். ஆனால் அரசு கட்டட பணிகள், பெரிய பாலங்கள் உள்ளிட்ட அரசு தொடர்பாக பெரிய அளவில் நடைபெறும் பணிகளுக்கு செல்லும் இரும்பு கம்பி லோடுகள், நேரடியாக அரசு வேலை நடைபெறும் இடங்களுக்கு சென்று, அங்கே இறக்கப்படும்.இந்த சமயத்தில் ஒப்பந்ததார்கள், மீண்டும் இரும்பு கம்பியின் எடையை சரி பார்க்க முடியாது. இது மாதிரி பணிகளுக்கு செல்லும் இரும்பு கம்பிகளை குறி வைத்து, லாரி டிரைவர்களுடன் கூட்டு சேர்ந்து இரும்பு வியாபாரிகள் தொடர்ந்து திருடி, லட்சக்கணக்கில் பணம் பார்த்து வந்தனர் என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை