ஆதார் புதுப்பித்தல் பணிகள் : பொதுமக்கள் கடும் அவதி
திண்டிவனம்: மாவட்டத்தில் ஆதார் எடுப்பதற்கும், புதுப்பித்தல் மற்றும் திருத்த பணிகளுக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக ஆதார் அடையாள அட்டை பதிவு செய்வதற்கும், அதில் முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் போன்ற பணிகளுக்காகவும், பொதுமக்கள் தொடர்ந்து ஆதார் சேவை மையங்களை நாடி வருகின்றனர். தற்போது இந்த மையங்களுக்கு வரும் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, திண்டிவனம் வட்டாரத்தில் அப்பகுதி தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், அஞ்சல் துறை அலுவலகம் கே.வி.பி., மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆகிய, 5 இடங்களில் ஆதார் எடுத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தாலுகா அலுவலகத்திற்கு தினசரி 200 பேர் வருகின்றனர். இதில், தினசரி 50 பேர் மட்டுமே பயன்பெறும் சூழல் உள்ளது. தற்போது, தேசிய ஊரக வேலை திட்டப் பணியில் ஈடுபடும் முதியோர்கள் ஆதார் பதிவு மூலம் கை ரேகை வைத்து கூலி பெறுகின்றனர். இதில் பெரும்பாலான முதியோர்களின் கைரேகை பொருந்தாமல் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்படுவதால், ஊராட்சி நிர்வாகம் தரப்பில் ஆதாரை புதுப்பித்து வாருங்கள் என கூறி அனுப்புகின்றனர். இதனால் ஏராளமான கிராமப்புற முதியோர்கள் தினசரி தாலுகா அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களுக்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் என மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் தொடர்கிறது. ஒரு நாளைக்கு 50 முதல் 60 பேருக்கு டோக்கன் வழங்கி பதிவு செய்து அனுப்பி வருகிறோம் என்று ஆதார் சேவை மைய ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆதார் புதுப்பித்தல் பணியில் மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சனை உள்ளதால், கூடுதல் சிறப்பு முகாம்களை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள பொதும்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.