உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.சி.ஆரில்., அரசு பஸ் மோதி முதியவர் பலி தொடரும் விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை

இ.சி.ஆரில்., அரசு பஸ் மோதி முதியவர் பலி தொடரும் விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை

கோட்டக்குப்பம்:கோட்டகுப்பம் இ.சி.ஆரில்., அரசு பஸ் மோதியதில், பழைய இரும்பு பொருள் வியாபாரி உயிரிழந்தார்.புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர், வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; தட்டு வண்டியில் சென்று பழைய புத்தகம், இரும்பு விற்கும் வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை இ.சி.ஆரில், சின்னமுதலியார்சாவடியில் தட்டுவண்டியுடன், சாலையை கடக்க முயற்சித்தார்.அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக வந்த அரசு பஸ் தட்டு வண்டியில் மோதியது. அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்த முடியாததால், நுாறு மீட்டர் துாரத்திற்கு சென்று நின்றது.பஸ்சின் முன்பக்கத்தில் சிக்கிய தட்டுவண்டியையும் இழுத்து சென்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவரின் உடலை கோட்டக்குப்பம் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேந்திரன் மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரில், தமிழக அரசு பஸ் டிரைவர், வடலுார் ஆரோக்கியராஜ் மீது கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனங்கள்

புதுச்சேரியில் இருந்து காலாப்பட்டு வரை இ.சி.ஆரில்., ஏராளமான கெஸ்ட் ஹவுஸ்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும், வாகனமும் அதிகம் வருகிறது. இச்சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.கோட்டக்குப்பம் இ.சி.ஆரில், விபத்துக்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இங்கு, விபத்துக்கள் நடக்காத நாட்களே கிடையாது. விபத்தை தடுக்க முக்கிய சந்திப்புக்களில் இருபக்கமும் பேரிகார்டுகள் வைத்தாலும், வாகன ஓட்டிகள் வேகத்தை குறைப்பதில்லை. எனவே போலீசார் கண்காணித்து வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி