பழங்குடி பெண்ணுக்கு கல்லுாரியில் சேர்க்கை: கலெக்டர் ஆணை வழங்கல்
செஞ்சி: பழங்குடி வகுப்பை சேர்ந்த பெண்ணுக்கு சிறப்பு சேர்க்கை அடிப்படையில் கல்லுாரியில் சேர்வதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், திண்டிவனத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் வித்யா சிறப்பு சேர்க்கையின் அடிப்படையில் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் இளங்கலை பி.ஏ., தமிழ் பட்டப்படிப்பு படிப்பதற்கான ஆணையை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார். மேலும் கல்வி உதவித் தொகையாக கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.இது குறித்து கலெக்டர் கூறுகையில், 'திண்டிவனத்தைச் சேர்ந்த பழங்குடி வகுப்பைச் சேர்ந்த வித்யா, தனக்கு 2 குழந்தைகள் உள்ளதாகவும், 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், 24 வயது நிறைவு பெற்றதால் கல்லுாரியில் சேர முடியவில்லை. தமிழ் மீது அதிக ஆர்வம் இருப்பதால் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணிபுரிய விரும்புவதால் கல்லுாரியில் சேர்ந்த பி.ஏ.தமிழ் இளங்கலை படிக்க உதவிட வேண்டும் என மனு கொடுத்திருந்தார். அதன்படி வித்யாவிற்கு கல்லுாரியில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.செஞ்சி தாசில்தார் துரைசெல்வன், கோவிந்த சாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் தங்கராஜ், பி.டி.ஓ.,க்கள் ராமதாஸ், இளங்கோவன் உடனிருந்தனர்.