விவசாய ஊக்க நிதி பயனாளிகள் இணையத்தில் பதிவேற்ற அறிவுரை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், விவசாய ஊக்கநிதி பெறும் பயனாளிகள், இணையத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:மத்திய அரசின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவித் திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு 6,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டு வரை 18 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் இத்திட்டத்தில் 1 லட்சத்து 5,792 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதில், 6,892 விவசாயிகள், தங்கள் விபரங்களை இணையத்தில் முழுதுமான கே.ஒய்.சி., விபரத்தை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.தாலுகா வாரியாக திருவெண்ணைநல்லுார் 914, செஞ்சி 953, மேல்மலையனுார் 852, முகையூர் 612, வானுார் 729, வல்லம் 635, கோலியனுார் 176, விக்கிரவாண்டி 382, காணை 517, மரக்காணம் 448, கண்டமங்கலம் 382 மயிலம் 213, ஒலக்கூர் 179 என மொத்தம் 6,892 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர்.இவர்கள் உடனடியாக கே.ஒய்.சி., பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவர்களது விபரம், வேளாண்துறை அலுவலர்களிடம் உள்ளது. இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், வட்டார வேளாண் அலுவலர்களை அணுகி விடுபட்ட விபரத்தை பதிவு செய்ய வேண்டும்.இந்த கே.ஒய்.சி., பதிவு என்பது, மின்னணு முறையில் திட்டப்பயனாளர்களை ஆதார் எண் மூலம் அறிந்து கொள்ளும் முறையாகும். எதிர்வரும் தவணைகளை பெற ஆதார் விபரங்களை சரிபார்ப்பது அவசியமாகும்.ஆதார் எண்ணுடன் மொபைல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், பி.எம்., கிசான் போர்ட்டலில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஓ.டி.பி., மூலம் பதிவு செய்யலாம்.பொது சேவை மையங்களை அணுகி, பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யலாம். வேளாண்த்துறை அலுவலர்களை அணுகி, பி.எம்., கிசான் ஆப் மூலமும் பதிவு செய்யலாம்.வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், ஆதார் எண்ணை இணைப்பு செய்ய வேண்டும் அல்லது புதிதாக அஞ்சலக வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.