உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பயிர்களை காப்பீடு செய்ய வேளாண்துறை அறிவுறுத்தல்

பயிர்களை காப்பீடு செய்ய வேளாண்துறை அறிவுறுத்தல்

விழுப்புரம்: மாவட்டத்தில் சிறப்பு (சம்பா) பருவ பயிர் நெல் 2, ராபி பருவ பயிர்களான உளுந்து, நிலக்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை ஆரம்பத்திலேயே தீவிரமாக பொழியும் நிலையில் விவசாயிகள் அனைவரும் சாகுபடி செய்துள்ள நெல் 2, உளுந்து, நிலக்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும். மாவட்டத்தில் சிறப்பு (சம்பா) பருவத்திற்கு, 13 வட்டாரங்களில் உள்ள, 794 வருவாய் கிராமங்களில் நெல் 2 பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், உளுந்து, நிலக்கடலை, கரும்பு பயிர்களுக்கு 34 குறுவட்டங்களிலும், எள் பயிருக்கு 14 குறுவட்டங்களிலும் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு (சம்பா) பருவத்தில் நெல் 2 நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் நவ., 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். உளுந்து பயிர் வரும் நவ., 30ம் தேதிக்குள்ளேயும், நிலக்கடலை வரும் 2026ம் ஆண்டு ஜன., 20ம் தேதிக்குள்ளும், எள் பயிர் வரும் ஜன., 31ம் தேதிக்குள்ளும், கரும்பிற்கு, வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக யூனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெல் 2 பயிருக்கு விவசாயி, ஏக்கருக்கு ரூ.544.28 பிரிமியமாக செலுத்தினால் காப்பீட்டு தொகை ரூ.36,285.31; உளுந்து பிரிமியம் ரூ.254.9 செலுத்தினால், காப்பீட்டு தொகை ரூ.16,993.12; நிலக்கடலை பிரிமியம் ரூ.467.81 செலுத்தினால் காப்பீட்டு தொகை ரூ.31,187.37; எள் பிரிமியம் 181.43 செலுத்தினால், கா ப்பீட்டு தொகை ரூ.12,095.1; கரும்பு பிரிமியம் ரூ.1,149.03 செலுத்தினால், காப்பீட்டு தொகை ரூ.60,475.52; என கிடைக்கிறது. பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீட்டு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்கள் பெற அருகே உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை