தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வேளாண் அதிகாரிகள் தீவிரம்
தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அதன் நன்மைகளை விளக்கி, பொது மக்கள் அதனை தாராளமாக சாப்பிடவும், விவசாயிகள் பயிரிடவும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம், வானுார், முகையூர், விக்கிரவாண்டி தாலுகாக்களில் 9,000 ஏக்கரில் தர்பூசணி பயிரிடப்பட்டு, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தர்பூசணி தோட்ட பயிர் சராசரியாக, ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 மெட்ரிக் டன் மகசூல் என்ற அளவில், 72 ஆயிரம் மெ.டன் அளவில் உற்பத்தியாகி, விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டி தருகிறது. தர்பூசணி தோட்ட பயிர், டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி வரை பயிரிட்டு, மார்ச் முதல் மே வரை அறுவடை செய்வர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன், தர்பூசணி பழங்களில் ரசாயன கலப்படம் செய்யப்படுவதாக, வதந்தி பரவியதால், அதன் விற்பன கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள் போராடி, நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தினர்.அரசு துறையினர் கள ஆய்வு செய்து, தர்பூசணியில் ரசாயன கலப்பு என்ற தகவல் வதந்தி என நிரூபித்தனர். தர்பூசணி விற்பனை பாதிப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இதனால், தர்பூசணி குறித்த வதந்தி, அதன் நன்மைகளை விளக்கி வேளாண் துறையினர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அன்பழகன் கூறியதாவது:அரசு உத்தரவின்படி, வதந்தி பரவிய துவக்கத்திலே, மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டு அதன் உண்மை நிலை விளக்கப்பட்டது. தர்பூசணி அதிகம் சாகுபடி செய்யப்படும் மரக்காணம், ஒலக்கூர், வானுார் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால், கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. இரும்புச்சத்து மற்றும் விட்டமின் ஏ, சி, பி1, பி6 போன்ற நுண்ணுாட்ட சத்துக்களும் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகளவில் உள்ளதால், உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. குறைந்த அளவு கக்ரோஸ் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் எவ்வித தயக்கமுவின்றி உட்கொள்ளலாம். சிவப்பு நிறம் ஏன்
தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற புழங்களின் உள்ளது போல், தர்பூசணி பழத்திலும் இயற்கையாவே லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதால், சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மஞ்சள் நிற தர்பூசணி பழத்திற்கு பீட்டா கரோட்டீன் எனப்படும் சுரப்பி காரணம் ஆகும்.இதை கேரட், சக்கரை வள்ளி கிழங்கு, குடை மிளகாய் போன்ற காய்கறிகளிலும் காணலாம். இந்த லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டீன் நமது கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண்புரை நோயிலிருந்து பாதுகாக்கிறது. இந்த விபரங்களை பொது மக்களிடம் நாங்கள் கூறி வருகிறோம்.விவசாயிகளிடம் சென்று, அதிகளவில் பயிரிடுவதற்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். இணையதளம் மூலமாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சத்துகள் நிறைந்த தர்பூசணியில், வதந்திகளை நம்பாமல், பொதுமக்கள் அனைவரும் உண்டு பயன்பெறும்படும் படி, அரசு சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அன்பழகன் கூறினார்.