அ.தி.மு.க., பேனர் அகற்றம்: திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில் அ.தி.மு.க.,வினர் வைத்திருந்த பேனரை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. திண்டிவனத்தில் நேற்று அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக அ.தி.மு.க.,வினர் காந்தியார் திடல், தாலுகா அலுவலக சந்திப்பு என பல இடங்களில் பேனர் வைத்திருந்தனர். இதில் தாலுகா அலுவலகம் எதிரில் வைத்திருந்த பேனரில், தி.மு.க., அரசை கண்டித்தும், உதயசூரியன் சின்னத்தை தலைகீழாக போட்டும் கிண்டலடித்திருந்தனர். இதற்கு 17வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன் டவுன் போலீசில், தி. மு.க., சின்னத்தை இழிவுப்படுத்தி விளம்பரம் வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என புகார் தெரிவித்தார். மேலும், பேனரை அகற்றவில்லை என்றால் தி.மு.க.,வினரே அகற்றி விடு வார்கள் என கூறினார். அதன்பேரில் டவுன் போலீசார் பேனர் வைத்திருந்த அ.தி.மு.க., நிர்வாகியிடம், பிரச்னைக்குரிய பேனரை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், அவர்கள் பேனரை அகற்றவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 8:30 மணியளவில், டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், பிரச்னைக்குரிய அந்த பேனரை அகற்றி, டவுன் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.