பொன்முடி உருவ படத்தை செருப்பால் அடித்த அ.தி.மு.க.,வினர்
விழுப்புரம்: விழுப்புரம் காணையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடி உருவப்படத்தை அ.தி.மு.க.,வினர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஹிந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 14 இடங்களில் அ.தி.மு.க., மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காணையில், ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அப்போது, அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், பதவி நீக்கம் செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அமைச்சர் பொன்முடி உருவப்படத்தை, அ.தி.மு.க.,வினர் செருப்பால் அடித்தனர். இதைக்கண்ட போலீசார், அ.தி.மு.க.,வினரை தடுத்து அமைச்சர் பொன்முடி உருவப்படத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஸ்ரீதர், தொகுதி செயலாளர் ராமலிங்கம், மகளிரணி ஒன்றிய தலைவர்கள் மல்லிகா, கலைச்செல்வி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், மாணவரணி தலைவர் எழிலரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.