நெல் விதைப்பண்ணையில் உதவி இயக்குனர் ஆய்வு
வானுார்: சிறுவை கிராமத்தில் விவசாயி அமைத்துள்ள நெல் விதைப்பண்ணையை, வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.வானுார் வட்டாரத்தில் சொர்ணவாரி, சம்பா மற்றும் நவரை பருவத்தில் 6,200 எக்டர் ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுகிய கால நெல் ரகமான ஆடுதுறை 37, விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.வானுார் தாலுகாவில் 35 ஏக்கர் பரப்பில் ஆடுதுறை 37 ரகம் விதைப்பண்ணை அமைத்து, விவசாயிகளிடம் இருந்து 30 மெட்ரிக் டன் விதை நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவை, நடப்பு ஆண்டில் பின் சம்பா மற்றும் நவரை பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.சிறுவை கிராமத்தில் முன்னோடி விவசாயி பாபுராவ், தனது 10 ஏக்கர் நிலத்தில், நெல் ஆடுதுறை 37 விதைப்பண்ணை அமைத்துள்ளார். இந்த பண்ணையை வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி விதை அலுவலர் மோகன் குமார் உடன் இருந்தார்.