மேலும் செய்திகள்
அண்ணா நகர் பள்ளிக்கு முழுமையான சுற்றுச்சுவர்
09-Jan-2026
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் புதிய டவுன் ஹால் பணியை முழுமையாக முடிப்பதற்கு, அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். விழுப்புரம் நகராட்சி 1919ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மூன்றாம் நிலை பேரூராட்சியாக துவங்கப்பட்டது. 1988ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2019ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி நுாறாண்டு நிறைவு பெற்றுள்ளது. நகரின் வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக கடந்த ஆட்சியில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதி உள்ள இடத்தில் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி, கடந்த ஆட்சியில் துவங்கி நிறைவு பெற்று புதிய கட்டடத்திற்கு நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு ஜனவரி மாதம் விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 திட்டங்கள் அறிவித்தார். அதில், விழுப்புரம் நகராட்சி அலுவலக பழைய கட்டடம் இருந்த இடத்தில், 2 கோடி ரூபாய் செலவில் புதிய டவுன் ஹால் அமைக்கப்படுமென அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், புதிய டவுன் ஹால் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கியது. கடந்தாண்டு நவம்பர் மாதம் துவங்கிய பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டவுன் ஹால் முழுமையான வசதிகளுடன் அமைப்பதற்கு, போதிய அளவிலான நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, கூடுதலாக 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென நகராட்சி சார்பில், கலெக்டரிடம் வலியுறுத்தப்பட் டுள்ளது. இதற்கு அரசு தரப்பில், உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு பணியை ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் அமைக்கப்படும் புதிய டவுன் ஹால், அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைப்பதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய டவுன்ஹால் கட்டடத்தில் அடிப்படை வசதிகளுடன் அமைத்திட வேண்டும். தனியார் திருமண மண்டபம், வணிக வளாகம் அமைக்கின்ற போது, ஏராளமான விதிமுறைகளை சுட்டிக்காட்டும் அரசு அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் அமைக்கின்ற டவுன் ஹால் கட்டடத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்பதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. சமுதாய கூட்டத்திற்கான போதிய வசதிகள் இன்றி அவசர அவசரமாக புதிய டவுன் ஹால் திறப்பதற்கு முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. இங்கு அனைத்து அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், அ.தி.மு.க., ஏ.டி.எஸ்.பி., (ஓய்வு)
முழுமையான அடிப்படை வசதிகளுடன் டவுன்ஹால் கட்டடம் அமைப்பதற்கு, நகராட்சி சார்பில் 4 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், 1.48 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், டவுன் ஹால் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிவறை வசதிகள் இடம்பெறவில்லை. இங்கு திருமணம் உள்ளிட்ட விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, இயற்கை உபாதைக்காக பெண்கள் பரிதவிக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கண்டுகொள்ளாமல், அலட்சியத்துடன் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. -சக்திவேல், அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி செயலாளர்
விழுப்புரம் பகுதியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரின் மைய பகுதியில் புதிய டவுன் ஹால் கட்டும்போது, அதற்கு தேவையான அத்தியாவசிய கட்டமைப்புகள் இடம் பெற வேண்டும். இந்த சமுதாய கூடத்தில், ஏழை, எளிய மக்கள் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சி நடத்தும்போது, சமையலறை அவசியமாகும். உணவு தயாரிப்பதற்கான சமையலறை, உணவு பரிமாறும் கூடம் (டைனிங் ஹால்), உணவு பரிமாறுவதற்கான பெஞ்சு, டேபிள் வசதிகள் இடம்பெற வேண்டும். இதற்காக நிதி ஒதுக்காமல், அரைகுறையாக திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சித்து வருவது வேதனை அளிக்கிறது. -செந்தில்வேலவன், அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர்
விழுப்புரத்தில் பழைய நகராட்சி கட்டடத்தை இடித்து விட்டு, புதிய டவுன் ஹால் கட்டப்படுகிறது என்பது வரவேற்க வேண்டிய விஷயம். அதே நேரத்தில், இங்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ெஷட் அமைத்திட வேண்டும். அதேபோல், மணமகன் அறை, மணமகள் அறை அமைக்க வேண்டும். டவுன் ஹாலில் டைனிங் டேபிள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவைற்றை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திட வேண்டும். நகராட்சி சார்பில் திட்ட மதிப்பீடு செய்த தொகையை முழுமையாக அரசு ஒதுக்கித் தர வேண்டும். அடிப்படை வசதிகளுடன் கட்ட வேண்டும். - டாக்டர் கந்தன், முதன்மைச் செயலாளர் மக்கள் உரிமைக் கழகம்
புதிய டவுன் ஹால் கட்டடத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் சிரமின்றி செல்ல சாய்தள நடைமேடை ஏற்படுத்திட வேண்டும். முதல் தளத்திற்கு முதியோர்கள் செல்வதற்காக 'லிப்ட்' வசதி, வளாகம் முழுவதும் போதிய விளக்கு வெளிச்சம், வாகனங்கள் நிறுத்த பாதுகாப்பான ெஷட், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தயாரித்த திட்ட மதிப்பீட்டின்படி, டவுன் ஹால் அமைப்பதற்காக கூடுதலான நிதியை ஒதுக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த டவுன் ஹால் முழுமையான அடிப்படை வசதிகளுடன் அமைந்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். -இருவேல்பட்டு குமார், மண்டல செயலாளர், இந்திய குடியரசு கட்சி
09-Jan-2026