அமைச்சர் மீது சேற்றை வீசிய சம்பவம் போலீசை கண்டித்து சாலை மறியல் பா.ஜ., நிர்வாகி உட்பட 2 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார்: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய இருவர் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மலட்டாற்றில் கடந்த மாதம் 2ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தில் ஆற்றங்கரையோரத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின.அதனையறிந்த அமைச்சர் பொன்முடி மறுநாள் டிச.3ம் தேதி இருவேல்பட்டு கிராமத்தை பார்வையிட சென்றார். அப்போது, அங்கு திரண்ட கிராம மக்கள் ஆவேசத்தில் அமைச்சரை முற்றகையிட்டு அவர் மீது சேற்றை வாரி வீசினர்.இதுகுறித்து வி.ஏ.ஓ., அளித்த புகாரின் பேரில், அமைச்சர் மீது சேற்றை வீசிய விஜயராணி, ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து தேடிவந்தனர்.ஒரு மாதத்திற்கு மேலாகியும், இருவரும் தலைமறைவாக உள்ளனர். அதனால், அவர்களின் உறவினர்களுக்கு போலீசார் நெருக்கடி கொடுத்து வந்தனர்.இதனால், ஆத்திரமடைந்த விஜயராணியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4:30 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பா.ஜ., ஒன்றிய தலைவர் கதிரவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மாலை 5:00 மணிக்கு அங்கிருந்து அகற்றினர். இந்த மறியலால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிந்து பா.ஜ., ஒன்றிய தலைவர் கதிரவன்,32; ராமச்சந்திரன் மனைவி அன்புக்கரசி,45; ஆகியோரை கது செய்து விசாரித்து வருகின்றனர்.