முதல்வர் பங்கேற்கும் விழா கலெக்டர், எஸ்.பி., ஆய்வு
விழுப்புரம்,: விழுப்புரத்தில் முதல்வர் பங்கேற்கும் விழா பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்துமிடம் குறித்து கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.விழுப்புரத்திற்கு வரும் 29ம் தேதி காலை வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கு கிறார்.இதனால், விழுப்புரத்தில் புதிய மணிமண்டபம், நினைவரங்கம் அருகே முதல்வர் வருகைக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதிகள் குறித்தும், விழாவிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவது குறித்தும், கலெக்டர் பழனி தலைமையில், எஸ்.பி., தீபக்சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய்நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை இடத்தினை நேரில் ஆய்வு செய்தனர்.விழா பகுதி அருகே உள்ள கண்டமானடி ஊராட்சி, ஜானகிபுரம் பைபாஸ் சாலை ஒட்டியுள்ள பகுதியில், வாகனம் நிறுத்துவதற்கான வசதிகள் குறித்தும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.ஏ.டி.எஸ்.பி., திருமால், ஊராட்சி உதவி இயக்குனர் விக்னேஷ் உள்ளிட்ட அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.