சேத பட்டியலில் இடம் பெறாத சின்ன கோட்டக்குப்பம் பகுதி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சின்ன கோட்டக்குப்பம் பகுதி, சேத பட்டியலில் இடம் பெறாதது அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டான சின்ன கோட்டக்குப்பம் பகுதி புயல், வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதிகாரிகள், சின்ன கோட்டக்குப்பம் பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை. இந்த பகுதியில் உள்ள 450 வீடுகளிலும், வெள்ளம் நீர் சூழ்ந்து வடிவதற்கு இரண்டு நாட்கள் ஆனது. புதுச்சேரியின் வெள்ளவாரி ஓடையில் இருந்து வெளியேறிய மழை நீர், அனைத்தும் இந்த குடியிருப்புகளை சூழ்ந்தது.ஆனால், இதுவரை கணக்கெடுப்பில் இந்த பகுதி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் இறந்த 60 வயது ஹாலிதீன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தமிழக அரசின் பாதிப்பு கணக்கெடுப்பில் இடம் பெறவில்லை.வெள்ளத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது சின்ன கோட்டக்குப்பம் என்பது அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். இது தொடர்பாக கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷனருக்கும், விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்தும் இன்னும் நிவாரணம் அறிவிக்கப்படாமல் உள்ளது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.