ஊஞ்சல் உற்சவத்தில் வசூல் வேட்டை: இந்து சமய அறநிலையத்துறை மவுனம்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை, மாசி ஆகிய இரண்டு மாதங்கள் தவிர்த்து பிற மாதங்களில் அமாவாசையன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது.இதில் பங்கேற்க திரளான பக்தர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வருகின்றனர். இவர்களில் வசதி இல்லாதவர்கள் ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரே உள்ள திறந்த வெளியில் மாலை 6:00 மணியில் இருந்து நள்ளிரவு 12:00 மணிவரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். வசதி படைத்தவர்கள் இங்கு பாதுகாப்பு பணியில் பல ஆண்டு அனுபவம் பெற்ற போலீசார் மூலமும், கோவில் ஊழியர்கள், பூசாரிகளின் குடும்பத்தினர்கள் மூலமும் 5,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து கோவில் உள்ளே சென்று விடுகின்றனர்.இவர்களை ஊஞ்சல் உற்சவம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு நாதஸ்வர கோஷ்டியினர் உட்காருவதற்கான ஊஞ்சல் மேடைக்கு அருகே உள்ள மேடையில் அமர வைத்து விடுகின்றனர். இவர்கள் சுவாமி வரும் போது எழுந்து நின்று சுற்றியுள்ள பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுக்கின்றனர். நாதஸ்வர கோஷ்டியினர் உட்காரவும் இடம் தருவதில்லை. பாதுகாப்புக்கு வரும் போலீசாரே பலரையும் இது போல் அழைத்து வந்து மேலே உட்கார வைப்பதால் இந்த முறை கேடை கண்டு கொள்வதில்லை. இந்து சமய அறநிலையத்துறையினரும் கோவில் ஊழியர்களையும், பூசாரிகளின் பெயரை சொல்லி வசூலில் ஈடுபடுபவர்களையும் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பல லட்சம் பக்தர்கள் வரும் விழாவில் சில நுாறு பேரை மட்டும் முறைகேடாக அனுமதிப்பது பக்தர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.