ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்: அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம், வழுதரெட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் துவக்கப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 76 மாணவர்கள், மேல்நிலைப் பள்ளியில் 172 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும், எழுத்தும் திறன் பயிற்சி திட்டம் மற்றும் மாதாந்திர தேர்வு முறைகள் குறித்து ஆய்வு நடந்தது. மேலும், மாணவர்களுக்கு நன்கு புரியும் வகையில் பாடத்திட்டங்களை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்; தினந்தோறும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பாடங்களை உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்; மாணவர்கள் இடைநிற்றல் இன்றி அன்றாடம் பள்ளிக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்; என கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது, சி.இ.ஓ., அறிவழகன், உதவி திட்ட அலுவலர் நாகமணி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள் உடனிருந்தனர்.