எல்லீஸ் அணைக்கட்டில் கலெக்டர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லுார்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம், எல்லீஸ் அணைக்கட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கள ஆய்வு மேற்கொண்டார். கடந்தாண்டு 'பெஞ்சல்' புயல் காரணமாக சேதமடைந்த எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் உள்ள வாய்க்கால் மற்றும் பெண்ணையாறு இடையே, 'பிரிப்பு' சுவர் உள்ளிட்ட மறு சீரமைப்பு பணியினை பார்வையிட்டார். தொடர்ந்து திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர், மலட்டாற்றில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் மதகு அமைக்கும் பணி மற்றும் டி. எடையார் கிராமத்தில் மலட்டாறு-கோரையாறு இடையே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.