இலங்கை தமிழர்களுக்கான வீடுகள் கீழ்புத்துப்பட்டில் கலெக்டர் ஆய்வு
கோட்டக்குப்பம் : கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான குடியிருப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.மரக்காணம் ஒன்றியம், வன்னிப்பேர் ஊராட்சி, ஆலந்துார் ஊராட்சி பகுதிகளில் இருளர் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து, கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், 23.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 440 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். பின், முதலியார்குப்பம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பார்வையிட்டார்.அப்போது, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, மரக்காணம் பி.டி.ஓ.,ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.