உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கலெக்டர் ஆய்வு! வீடுகளுக்கே சென்று பணி மேற்கொள்ள அறிவுரை

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கலெக்டர் ஆய்வு! வீடுகளுக்கே சென்று பணி மேற்கொள்ள அறிவுரை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. 9-வது நாளான நேற்று, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான், விழுப்புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நகராட்சி சுதாகர் நகரில் உள்ள ராஜாதேசிங்கு தெரு, பூந்தோட்டப்பாதை ராஜமாணிக்கம் தெரு, விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்பு ஆகிய இடங்களில் நேரில் சென்று, தீவிர திருத்தப்பணிகளை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, வானூர் தொகுதிக்குட்பட்ட தந்தராயன்குப்பம், வானூர் அடுத்த இரும்பை ஊராட்சி இடையன்சாவடி, திருச்சிற்றம்பலம் ஊராட்சி, கிளியனூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் செயலியில் உள்ளீடு செய்யும் பணியை ஆய்வு செய்தார். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கணக்கீட்டு படிவங்கள் சரியாக வழங்கப்படுகிறதா என வாக்காளர்களிடம் கேட்டறிந்தார் . இதனையடுத்து, கலெக்டர் கூறியதாவது: வாக்காளர்களை அலைக்கழிக்காமல், வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரியான விவரத்தினை கேட்டறிந்து, படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு படிவங்களில் ஒரு படிவத்தினை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற வேண்டும். மற்றொரு படிவத்தினை வாக்காளர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். கணக்கீட்டு படிவத்தில், வாக்காளர் பெயர், பாகம் எண், உறவு முறை போன்ற அனைத்து விவரங்களும் சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். இந்த திருத்தப்பணிகள், வரும் டிச.4க்குள் முடித்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவத்தினை வாக்காளர்களிடம் வழங்கி, பூர்த்தி செய்து திரும்பபெற வேண்டும். எனவே, வாக்குச்சாவடி அலுவலர்கள் சிறப்பான முறையில் இப்பணியை செய்து முடி க்க வேண்டும் என கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ராஜூ, முருகேசன், விழுப்புரம் நகர் நல அலுவலர் பிரியா, தாசில்தார் வித்யாதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ