அரசு பள்ளி தேர்ச்சி சதவீதம் உயர்த்த கலெக்டர் தலைமையில் ஆலோசனை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் ஷே க் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். விழுப்புரம் மாவட்டம் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் சராசரியாக 95.11 சதவீத தேர்ச்சி பெற்றது. இந்த சராசரி தேர்ச்சி சதவீத்திற்கு கீழ் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீத்தை உயர்த்துவது தொடர்பாக முதற்கட்டமாக 45 அரசு மேல்நிலைப் பள்ளிகளின், தலைமை ஆசிரியர்களுடன் கலெக்டர் கருத்து கேட்டு ஆய்வு நடத்தினார்.தேர்ச்சி சதவீதம் குறைவுக்கான காரணம் கண்டறியப்பட்டது. நடப்பு ஆண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க காலை, மாலையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள், வாராந்திர தேர்வுகள், குறுத்தேர்வுகள் தொடர்ந்து நடத்தவும், கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, தேர்ச்சிக்கான முக்கிய பாடக்குறிப்புகள் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது.பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, தேர்ச்சி பெறுவதற்காக பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் குறித்தும், பாடவாரியாக ஆசிரியர்கள் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் உயர்கல்வி பயின்றிடும் வாய்ப்பினை ஏற்படுத்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இந்தாண்டு பொதுத்தேர்வில், சிறப்பான தேர்ச்சி சதவீதத்தை பெற அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் கேட்டு கொண்டார்.