உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ், உணவு பாதுகாப்புத்துறை, சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் கூட்டாய்வு செய்து, போதை பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் விற்பனையை ஒழிப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். எஸ்.பி., சரவணன் முன்னிலை வகித்தார்.சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போதைப்பொருள் விற்பனை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு, முன்னெச்சரிக்கை பணிகளில் போலீஸ் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும். அனைத்து தாலுகாக்களிலும் பிரச்னை ஏற்பட காரணமாக இருப்பவர்களிடம், அமைதிக்குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில் 'டிரக் ப்ரீ டி.என்' என்ற மொபைல் போன் ஆப் குறித்து செயல்முறை விளக்கம் ஏற்படுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அந்த செயலி பயன்படுத்துபவர்கள் விபரம் மற்றும் இச்செயலி வாயிலாக வரும் புகார்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை போலீஸ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களோடு, கூட்டாக ஆய்வு செய்து, விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.கலால் உதவி ஆணையர் ராஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழரசன், ஆர்.டி.ஓ., முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !