உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடத்துவது குறித்து தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசுகையில், 'மாவட்டத்தில் நகரம், ஊரக பகுதிகளில் 291 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக வரும் 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 102 முகாம்கள் நடைபெற உள்ளது.இதில், நகரில் 13 அரசு துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகிளல் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. மருத்துவ முகாம்களும் நடக்கிறது.இந்த திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரடியாக தன்னார்வலர்கள் சென்று முகாம் தொடர்பான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்க வேண்டும். கலைஞர் உரிமை தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் யாராவது இருந்தால் முகாம் நடக்கும் நாளில் முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். முகாமில் ஒருங்கிணைக்கப்படும் 15 அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் சேவைகளின் விபரங்கள் முகாம் நடக்கும் இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். டோக்கன் வழங்கும் பணியில் உள்ளோர் மனு அளிக்க வரும் மக்களுக்கு வரிசைப்படி டோக்கன் வழங்கி உதவி மையத்தை எளிதில் அணுகும் வகையில் நடவடிக்கை எடக்க வேண்டும். காவல் துறை சார்பில் உதவி மையம் முகாம் நடக்கும் இடங்களில் அமைத்திட வேண்டும்.மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். இங்கு, துறைக்கான பெயர், கவுண்டர் எண் குறிப்பிட வேண்டும். மக்களுக்கு தனி இருக்கை வசதி ஏற்பாடு செய்வதோடு, மக்கள் கோரிக்கையை விண்ணப்பங்களில் இலவசமாக எழுத இரு தன்னார்வலர்களை நியமித்திட வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் கண்ணன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.