வன விலங்கு சரணாலயம் அமைக்க பரிசீலனை: பொன்முடி தகவல்
விழுப்புரம்; '' செஞ்சி அடுத்த பாக்கம் மலை பகுதியில், வன விலங்கு சரணாலயம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்'' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.மாநில அளவிலான வன அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம், நேற்று விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலந்தாய்வு செய்த அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நிலை, நடைபெற்று வரும் திட்டங்கள், ஆரம்பிக்க வேண்டிய திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் காலங்களில் பசுமை தமிழ்நாடு திட்டம், வன விலங்குகள் பாதுகாப்பு, வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.நாடு முழுவதும் காட்டுப்பன்றிகள் வனவிலங்குகள் பட்டியலில் உள்ளது. காட்டுப்பன்றிகளை சுடுவது குறித்து தெளிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளை சுடுவதற்காக கிராமப் பகுதிகளில் ஊராட்சி தலைவர், வி.ஏ.ஓ., அப்பகுதி வன அலுவலர், கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. வனத்துறை இல்லாத பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வந்தால், அவற்றை சுடுவதற்கான அதிகாரம் வனத்துறையினருக்கு வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாக்கம் மலை பகுதியில், வன விலங்கு சரணாலயம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.கோவையில் வரும் 28ம் தேதி, மாநில அளவில் வனத்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி துவக்கப்பட உள்ளது. அப்போது நவீன ரக துப்பாக்கி வழங்கப்படும். மரக்காணம் பகுதியில், பறவைகள் சரணாலயம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கும். வனத்துறையின் உள்ள காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.