கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: மாநில சட்டங்களையும், நலவாரியங்களையும் பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, விழுப்புரம் மாவட்ட கட்டட தொழிலாளர்கள் பஞ்சாயத்து சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, கவுரவ தலைவர் தமிழ்மணி, துணைச் செயலாளர் அருள் முன்னிலை வகித்தனர். அகில இந்திய கூடுதல் செயலாளர் கீதா கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் 4 தொகுப்பு சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டத்தின் கீழுள்ள 18 நலவாரியங்கள், விவசாய தொழிலாளர் நலவாரியம், மீனவர் நலாரியம் மற்றும் பிற துறைகளில் உள்ள 36 நலவாரியங்களை பாதுகாக்கும் அறிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பொருளாளர் குப்புசாமி நன்றி கூறினார்.