மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர் மழை அதிகபட்சமாக வளவனுாரில் 45 மி.மீ., பதிவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியபோதும், இரண்டு நாள்கள் மட்டும் மழை பெய்ததது. அதன் பிறகு தொடர்ந்து மழையின்றி, வறண்ட வாநிலையே நிலவியது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. அதிகாலை 1.00 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து காலை 9.00 மணி வரை, மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. மீண்டும் காலை 10.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.00 மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம் என மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.விழுப்புரம் புதிய பஸ் நிலையம், இந்திரா நகர் ரயில்வே பாலம், மகாராஜபுரம் தாமரைகுளம், சாலாமேடு சிஸ் நகர், முத்தோப்பு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. பஸ் ஸ்டேண்ட் , ரயில்வே தரைபாலத்தில் தேங்கிய மழை நீர், அங்குள்ள பம்ப் அவுஸ் மூலம் உடனுக்குடன் மோட்டார் போட்டு அகற்றினர். விழுப்புரத்தில் பகல் முழுவதும் தொடர் மழை பெய்ததால், பல்வேறு தரப்பினரும் அவதியடைந்தனர். நேற்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதால், மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிக்கு விடுமுறை விடுவார்கள் என எதிர்பார்த்த மாணவர்கள், விடுமுறை அளிக்காததால், மழையில் நனைந்தபடி வந்து சென்றனர்.மாவட்டத்தில் நேற்று காலை 8.00 மணிவரை மழையளவு (மி.மீ): விழுப்புரம் 40, கோலியனூர் 40, வளவனுார் 45, நேமூர் 17, வானூர் 20, மரக்காணம் 38, அனந்தபுரம் 13, அரசூர் 15, தி.வி.நல்லூர் 20, கெடார் 5, முண்டியம்பாக்கம் 5, சூரப்பட்டு 5, வல்லம் 5. மொத்தம் 271, சராசரி 15.