டிப்பர் லாரி மோதி தம்பதி படுகாயம்
திண்டிவனம் : திண்டிவனத்தில் ரிவர்சில் வந்த டிப்பர் லாரி மோதியதில் தம்பதி படுகாயமடைந்தனர். திண்டிவனம் அடுத்த எறையானுார் புதுகாலனியை சேர்ந்தவர் ஏழுமலை, 48; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி சத்யா, 42; இருவரும் நேற்று காலை, கட்டட வேலை செய்பவர்களுக்கு டிபன் வாங்கிக்கொண்டு, திண்டிவனம்-மரக்காணம் கூட்ரோட்டில் பைக்கில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மரக்காணம் பகுதியிலிருந்து எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று, போக்குவரத்து விதிகளை மீறி, மரக்காணம் கூட்ரோடு வழியாக, சென்னை புறவழிச்சாலையில் செல்வதற்காக திண்டிவனம் சாலையில் வந்துள்ளது. அப்போது அங்கு போக்குவரத்து அதிகாரிகள் நிற்பதை பார்த்த, டிப்பர் லாரி டிரைவர், திடீரென பின்பக்கமாக தாறுமாறாக ஓட்டியபோது, அங்கு சாலையோரம் நின்றிருந்த ஏழுமலையின் பைக் மீது மோதி இழுத்து சென்றதில், தம்பதி மீது லாரியின் டயர் ஏறி இறங்கியது. அதில் இருவரது கால்களும் நசுங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.விபத்து ஏற்படுத்தி டிப்பர் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார்.விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.