பெண்ணிடம் ரூ. 8.40 லட்சம் அபேஸ் விழுப்புரத்தில் சைபர் கிரைம் கும்பல் அட்டகாசம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே, பகுதி நேர வேலை என கூறி, பெண்ணிடம் ரூ. 8.40 லட்சம் அபேஸ் செய்த சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அரகண்டநல்லுாரை சேர்ந்தவர் ஆரிப் மனைவி நஸ்ரின்பானு, 28; கடந்த 17ம் தேதி, இவரது மொபைல் போனுக்கு, அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாட்ஸ்ஆப் மூலம் பகுதிநேர வேலை செய்ய விருப்பமா என தகவல் வந்தது. தாங்கள் அனுப்பும் டூரீஸ்ட் பேக்கேஜ் புகைப்படத்திற்கு, 5 ஸ்டார் ரேட்டிங் தந்தால் குறிப்பிட்ட தொகை தருவதாக தெரிவித்தார். இதனை நம்பிய நஸ்ரின்பானு, மர்ம நபர் கூறியபடி டாஸ்க் முடித்து ரூ. 890 பணம் பெற்றார். அதன்பின், மர்ம நபர் கூறும் வெப்சைட்டிற்கு சென்று, சிறிய தொகையை முதலீடு செய்து 5 ஸ்டார் ரேட்டிங் டாஸ்க்குகளை முடித்தால் அதிக லாம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய நஸ்ரின்பானு, கடந்த 23 மற்றும் 24ம் தேதி ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து ரூ.16,924 பணமும், ரூ.19 ஆயிரம் செலுத்தி ரூ.38 ஆயிரம் பணம் பெற்றார். அதன்பின்பு, மர்ம நபர் கூறியபடி, தனது வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட ஜிபே மூலம் மொத்தம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை, 8 தவணைகளாக செலுத்தி பல்வேறு டாஸ்க்குகளை முடித்தார். இதன் மூலம் முதலீடு மற்றும் லாப பணத்தை எடுக்க முயற்சித்தபோது, நஸ்ரின்பானு ஆன்லைன் போர்ட்டல் கணக்கு முடக்கப்பட்டது. பணத்தை எடுக்க மீண்டும் பணம் செலுத்தி டாக்ஸ் முடிக்க மர்ம நபர் வலியுறுத்தினார்.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நஸ்ரின்பானு, இது தொடர்பாக விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.