பெஞ்சல் புயலின் கோரத்தாண்டவத்தால் திண்டிவனம் பகுதிகளில் பெரும் பாதிப்பு
திண்டிவனம் : திண்டிவனம் பகுதியில் பெஞ்சல் புயலின் கோரத்தாண்டவத்தால், தரைப்பாலம், டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்தது. காந்திநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது, திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய்து.திண்டிவனம் பகுதிகளில் நேற்று முன்தினம் பிற்பகலிருந்து தொடர்ந்து மழை கொட்டிய நிலையில், புயல் கரையை கடந்த போது, சூரைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 37 செ.மீ. அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது.இதனால் திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தையொட்டியுள்ள கிடங்கல்(1) ஏரி நிரம்பி, மழை நீர் வெள்ளம் போல் நேற்று முன்தினம் கரை புரண்டோடியது. இதில் பஸ் நிலையத்தையொட்டி,கிடங்கல் பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் அடியோடு அடித்து செல்லப்பட்டது. இதேபோல் பாலத்தையொட்டியுள்ள டிரான்ஸ்பார்மர் வெள்ள நீரால் அடியோடு கவிழ்ந்தது.வெள்ள நீர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கரைபுரண்டோடியதால், பஸ் நிலையத்திற்கு செஞ்சி, வந்தவாசி, வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டது.இதேபோல் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிளான மரக்காணம் ரோடு காந்திநகர்,வகாப்நகர், விவேகானந்தன் நகர், நத்தமேடு நரிக்குறவர் காலனி, திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள காந்திநகர், சாய்லட்சுமி நகர், கங்கா நகர், பெலாக்குப்பம் ரோடு உள்ளிட்ட இடங்களில் புகுந்ததால், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.திண்டிவனம்-புதுச்சேரி சாலையிலுள்ள மரக்காணம் கூட்ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து கொண்டதால், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் அரசு டவுன் பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.மழை வெள்ள நீர், திண்டிவனம் அருகே ஒலக்கூருக்கு செல்லும் வழயிலுள்ள தரைபாலத்தின் மேல் கரைபுரண்டோடியதால், அந்த ஊருக்கு செல்லும் பாதை முற்றிலும் தடை பட்டது. தொடர் மழையால் திண்டிவனம் நகரப்பகுதி மட்டுமல்லாமல் பல இடங்களின் மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் பிற்பகல் 3 மணியிலிருந்து நேற்று மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.