அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் நீர்வளத்துறை பொறியாளர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் அணைக்கட்டு புனரமைப்பு பணிகளை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீழ்பெண்ணையாறு வடிநில கோட்டத்தில் நடந்து வரும் திட்ட பணிகளை, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். மரக்காணம் அருகே கழுவெளி புனரமைப்பு திட்ட கட்டுமான பணி, வண்டிப்பாளையம் புதிய மேம்பாலம் கட்டும் பணிகளை தலைமைப்பொறியாளர் பொதுப்பணித்திலகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து, விழுப்புரம் அருகே பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு, தற்போது தென்பெண்ணை ஆற்றில் புனரமைப்பு பணி நடந்து வரும் சொர்ணாவூர் அணைக்கட்டு பணியையும், தளவானூர் அணைக்கட்டு புனரமைப்பு பணியையும், எல்லீஸ் அணைக்கட்டு அருகே கப்பூர் கிராமத்தில் நடைபெறும் தடுப்பு சுவர் புனரமைப்பு பணி, ஏனாதிமங்கலத்தில் நடக்கும் ஆற்று தடுப்புசுவர் புனரமைப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது, அணைக்கட்டு புனரமைப்பு பணிகளின் தரம், கட்டுமான பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து, தரமாக கட்டமைக்கவும், உரிய ஆலோசனை வழங்கியுள்ளார். ஆய்வின்போது, விழுப்புரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார், அய்யப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.