உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு டாக்டருக்கு கொலை மிரட்டல்; தி.மு.க., நிர்வாகி உட்பட 3 பேர் கைது

அரசு டாக்டருக்கு கொலை மிரட்டல்; தி.மு.க., நிர்வாகி உட்பட 3 பேர் கைது

வானுார்; வானுாரில் அரசு டாக்டரை மிரட்டிய வழக்கில் தி.மு.க., கிளை செயலாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.வானுாரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 31ம் தேதி, திண்டிவனம் அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ்குமார்,36; பணியில் இருந்தார்.அப்போது, ஒரு பெண்ணின் ஆதார் அட்டையில், பெயர் மாற்றம் செய்ய வேண்டி, கையெழுத்து பெறுவதற்காக வானுார் அடுத்த எறையூரை சேர்ந்த ராமச்சந்திரன், 40; துருவை கிராமத்தை சேர்ந்த தி.மு.க., கிளை செயலாளர் முத்துவேல், இவரது மகன் உதயக்குமார் ஆகிய மூவரும் சென்றனர்.ஆதார் கார்டில் உள்ள நபர் நேரில் வர வேண்டும், இல்லையென்றால் மறுநாள் பணிக்கு வரும் டாக்டரிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ளும்படி டாக்டர் கூறியுள்ளார்.இதனால் மூவரும் டாக்டரிடம் வாக்குவாதம் செய்து, ஆபாசமாக பேசியுள்ளனர்.இது குறித்து டாக்டர் சுரேஷ்குமார், தன்னை ஆபாசமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக வானுார் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரன், முத்துவேல், உதயக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.டாக்டரை மிரட்டிய சம்பவத்தை கண்டித்து, நேற்று மதியம் 12.45 மணியளவில் திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சம்பத் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஜெயக்குமார், இணை செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !