பழுதடைந்த பேட்டரி வாகனங்கள் நகராட்சியில் மக்கி வீணாகும் அவலம்
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கிய தரமற்ற பேட்டரி வாகனங்கள் பழுதாகி மக்கி வீணாகி வருகிறது. விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கி செல்கின்றனர். குப்பைகளை தரம் பிரித்து வாங்க, நகராட்சி சார்பில் 40க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது.தரமற்ற பேட்டரி வாகனங்கள் வழங்கியதால், கடந்த 3 மாதத்திற்கு முன்பே பல வாகனங்கள் பழுதாகி நின்றது. பழுது சரிசெய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்காததால், துப்புரவு ஊழியர்கள் சாக்கு பையில் குப்பைகளை வாங்கி செல்கின்றனர். வாகனம் இல்லாததால், சுகாதாரமற்ற முறையில் துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர். பழுதான பேட்டரி வாகனங்கள் நகராட்சி அலுவலக வளாகம், புதிய பஸ் நிலையம் அருகே மக்கி வீணாகி வருகிறது. பழுதான பேட்டரி சரிசெய்து வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.