| ADDED : அக் 23, 2025 06:47 AM
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 10:30 மணிக்கு அங்காளம்மன் மங்கள கவுரி அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்களும், கோவில் பூசாரிகளும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் கற்பூர தீபமேற்றி ஆரத்தி காட்டி வழிபட்டனர். 11:30 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். நேற்று முன்தினம் கன மழை பெய்த நிலையிலும் இதை பெருட்படுத்தாமல் வழக்கம் போல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தனர். ஊஞ்சல் உற்சவம் துவங்குவதற்கு முன்பு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., விவேகானந்தம் சுக்லா ஆகியோர் ஹித்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். விழுப்புரம் எஸ்.பி., சரவணன், ஏ.டி.எஸ்.பி., தினகரன் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.