பஸ் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த வாலிபர் டிரைவர், கண்டெக்டர் தப்பியோட்டம்
வானுார் : வானுார் அருகே தனியார் பஸ் படிக்கட்டில் இருந்து வாலிபர் தவறி விழுந்து காயமடைந்தார். பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில் இருந்து திண்டிவத்திற்கு நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை புள்ளிச்சப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் சந்திரபிரகாஷ், 24; என்பவர் ஓட்டிச்சென்றார். தைலாபுரம் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன், 34; கண்டக்டராக இருந்தார். பஸ் திண்டிவனம் சாலையில், பாப்பாஞ்சாவடி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு நிறுத்தும்போது, படிக்கட்டில் இருந்த மொளசூரை சேர்ந்த முத்துவேல் மகன் வேல்முருகன், 22; என்பவர் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர் குதித்து தப்பியோடி விட்டனர். தகவலறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த வேல்முருகனை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்து, அந்த பஸ்சை பறிமுதல் செய்தனர். இந்த விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.