அரசு பள்ளிகளில் கற்றல் முறை மாற வேண்டும் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தல்
விழுப்புரம் : தமிழகத்தில் திறன்மிகு மாணவர்களை உருவாக்கும் வகையில், வகுப்பறை கற்றல் முறைகளை மாற்ற வேண்டும் என கல்வித்துறை இயக்குநர் பேசினார். விழுப்புரத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு செய்து பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப அரசு பள்ளி களை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாநிலம் முழுதும் இந்தாண்டு நல்ல தேர்ச்சி வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் தேர்ச்சி சதவீதம் 95 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களையும், முழுமையாக உயர் கல்விக்கு அனுப்பும் பணியை ஆசிரியர்கள் மேற் கொள்ள வேண்டும். கடந்தாண்டில் 74 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர். காலத்திற்கேற்ப பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் தயாராக வேண்டும். ஆரம்ப காலத்தில் தேர்ச்சி எண்ணிக்கையில் கவனம் செலுத்தினோம், இப்போது திறனை மேம்படுத்த வேண்டும். திறன்மிகு மாணவரை உருவாக்க சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியும், கேள்வி எழுப்பும் வாய்ப்பை வழங்கியும் கற்பிக்க வேண்டும். தற்போது, போட்டி தேர்வுகள், நீட் போன்ற தேர்வுகளில் சிந்திக்கும் திறன் பரிசோதிக்கப்படுவதால், அதற்கு மாணவர்களை நாம் தயார்படுத்த வேண்டும். அதற்கு, வகுப் பறை கற்பிக்கும் முறைகளை மாற்ற வேண்டும். தொழில் நுட்ப அறிவினை வளர்த்து, குறைந்த பட்சம் அடிப்படை தொழிற் கல்வி பயிலும் வகையில் உருவாக்க வேண்டும். மாணவர்களின் அறிவாற்றல் வளர்க்கும் இடமாக பள்ளி கல்வி அமைய வேண்டும். இவ்வாறு கண்ணப்பன் பேசினார்.