முதியவர் திடீர் போராட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், முதியவர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் செய்ய அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 78; மாற்றுத் திறனாளி. நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனுவுடன் ராஜேந்திரன், நீதிகேட்டு சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக கூறி அலுவலகம் முன்பு அமர்ந்தார்.ராஜேந்திரன் கூறியதாவது; விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரத்தை சேர்ந்த எனக்கு, பூர்வீக வீட்டு மனை 12 சென்ட் இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தேன். எனது கூரை வீடு தீப்பற்றி எரிந்ததால், வேறு ஒரு இடத்தில் வசித்து வருகிறேன். பூர்வீக இடத்தின் அருகில் வசிக்கும், வி.ஏ.ஓ., ஒருவர், எனது வீட்டு மனையை பொது சந்து என, ஆவணத்தில் மாற்றிவிட்டார். பட்டா மாற்றம் செய்ய கடந்த 2018ம் ஆண்டு முதல் மனு அளித்து போராடி வருகிறேன். நடவடிக்கை இல்லை.இதனால், நீதிகேட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தார்.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார், முதியவரை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளித்துச் செல்லும்படி கூறி அனுப்பி வைத்தனர்.