தீ பந்தம் ஏற்றி குடும்பத்துடன் தர்ணா; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம்; குடும்பத்துடன் கொத்தனார், தீ பந்தம் ஏற்றி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டைச் சேர்ந்தவர் முருகன், 48; கொத்தனார். இவர், நேற்று காலை தனது மனைவி ஆதிலட்சுமி, 44; மகன்கள் ஆதிகன், 26; அருண்குமார், 23; சத்தியஜோதி, 22; ஆகியோருடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நுழைவு வாயிலில் திடீரென தனது கையில் தீ பந்தத்தை ஏற்றி அலுவலக வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீபந்தத்தை மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர். முருகன் கூறுகையில், 'தமிழக அரசால் வீடு கட்டும் திட்டத்திற்கு ஆணை வழங்கப்பட்டது. இதற்காக 26 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத் தப்பட்டதால், வீடு கட்டும் வேலையை துவக்கினேன். வீடு கட்டும் இடம் என் தந்தை பெயரில் இருப்பதால், அரசின் தவணை தொகை எனது வங்கி கணக்கிற்கு செலுத்தவில்லை. மேலும், வீடு கட்ட பிறப்பித்த ஆணையையும், வங்கி கணக்கில் ஏற்கனவே செலுத்திய தொகையையும் பிடித்தம் செய்துள்ளனர். எனவே, நான் கடன் பெற்று கட்டி முடித்த வீட்டை பூர்த்தி செய்ய கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும்' என்றார். இதையடுத்து, போலீசார் அறிவுறுத்தியதன் பேரில், கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.