மானிய உதவியுடன் உழவர் நல சேவை மையங்கள்
விழுப்புரம்; தோட்டக்கலை துறை மூலம் உழவர் நல சேவை மையங்கள் துவங்க மானிய உதவி வழங்கப்படுவதாக, விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு : தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், உழவர் நல சேவை மையங்கள் துவங்கிட அரசு சார்பில் மானிய நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை வணிகம், வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த நபர்கள், உழவர் தல சேவை மையத்தினை மானியத்தில் அமைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் முதல்ரூ.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மையங்கள் அமைத்திட, 30 சதவீத மானியமாக ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வழங்கப்படும். இம்மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மைக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், தோட்டக்கலை விளை பொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும். தகுதியான திட்டக் கூறுகளுக்கான கடன் தொகைக்கு, வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியமாகவும் பெறலாம். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள், உழவர் தல சேவை மையங்களை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு வேளாண்மை அறிவியல் மையத்தில் 15 தினங்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.