உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் விதை நெல் இல்லை என விவசாயிகள்... குற்றச்சாட்டு; கூட்டுறவு கடனுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்

மாவட்டத்தில் விதை நெல் இல்லை என விவசாயிகள்... குற்றச்சாட்டு; கூட்டுறவு கடனுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்

விழுப்புரம்: மாவட்டத்தில் விதை நெல் இருப்பு இல்லை என கலெக்டர் தலைமையிலான குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., அரிதாஸ், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் முன்னிலை வகித்தனர். வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர், ஆர்.டி.ஓ., முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் புகார் மற்றும் குறைகள் குறித்து பேசியதாவது:கடந்த ஆண்டு உளுந்து பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கவில்லை. வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் மானிய திட்டங்களுக்கான நிதிகள், நேடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.செஞ்சி, அவலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டிகளில் போதிய இடவசதி இல்லை. வியாபாரிகள் கொள்முதல் செய்த மூட்டைகளை, தேக்கி வைத்துள்ளனர். இதனால், விவசாயிகளின் மூட்டைகள் வைக்க முடியவில்லை.இதேபோன்று, விவசாயிகளின் கண் முன் விலைப்பட்டியல் வெளியிட வேண்டும். இ நாம் திட்டத்தில் குளறுபடி நடக்கிறது. மரக்காணம் பகுதியில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ பாதிப்பு அதிகரித்துள்ளது. சிறுவாடி கொளத்துாரில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் விவசாயம் செய்ய முடியவில்லை.மேல் ஒலக்கூர் தொண்டி ஆற்றில், நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஏரிகளில் உள்ள தர்ப்பைகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.மாவட்டத்தில் ஏடிடி 37, 39 ரக நெல் விதைகள் இல்லை. இதனால், உளுந்துார்பேட்டை, திருவண்ணாமலை பகுதிக்கு சென்று விதை நெல் வாங்கும் அவலம் உள்ளது.கூட்டுறவு சொசைட்டிகளில் கடன் வாங்கினால், அதற்கு காப்பீடு செய்வதில்லை. இதனால், புயல், வெள்ள பாதிப்புகளால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன், கூட்டுறவு சொசைட்டிகளில் கடன் வாங்கினால், காப்பீடு கட்டாயமாக இருந்தது. ஆனால், தற்போது ஏன் காப்பீடு திட்டத்தை எடுத்தார்கள் என தெரியவில்லை.குறைகேட்புக் கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சரியான தீர்வு கிடைக்க வேண்டும். கோடையில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மின்வாரிய அலுவலகங்களில், டிரான்ஸ்பார்மர்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.தொடர்ந்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விவசாயிகளுக்கு கண்டிப்பு

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், இது விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம். விவசாயம் தொடர்பான பிரச்னைகளை மட்டுமே பேச வேண்டும். தலைவர் முறைகேடு, கட்டடம் திறக்கவில்லை என்பது உள்ளிட்டவைகள் குறித்து பேச வேண்டாம். அது குறித்து என்னை அலுவலகத்தில் சந்தித்து பேசலாம். இது 90 சதவீதம் விவசாயம் சார்ந்த மாவட்டம். விவசாய வளர்ச்சி பற்றி பேசலாம். கூட்டத்தில் சத்தம்போட்டு பேச வேண்டாம். இந்த சபைக்கு என்று ஒரு மரியாதை உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !