உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இடவசதியின்றி கொள்முதல் பாதிப்பால் விவசாயிகள்... தவிப்பு; கருமாதி கொட்டகையில் மூட்டைகள் அடுக்கும் அவலம்

இடவசதியின்றி கொள்முதல் பாதிப்பால் விவசாயிகள்... தவிப்பு; கருமாதி கொட்டகையில் மூட்டைகள் அடுக்கும் அவலம்

விழுப்புரம்,: விழுப்புரம் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு போதிய இடவசதியில்லாததால் நெல் கொள்முதல் பாதிப்பதோடு, கருமாதி கொட்டகையில் பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் அவல நிலை தொடர்கிறது.விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் கிராமத்தில், அரசு சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தை ஆனாங்கூர், பாணாம்பட்டு, பில்லுார், சேர்ந்தனுார், அரசமங்கலம், குச்சிப்பாளையம், திருப்பாச்சனுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு போதிய இடவசதியின்றி, குளத்தங்கரையில் உள்ள திறந்த வெளி களத்திலும், கருமாதி கொட்டகையிலும் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து, பாதுகாப்பற்ற நிலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகள் கூறுகையில்; நெல்கொள்முதல் நிலையத்திற்கு இடவசதியில்லாததால், தினசரி 800 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய அரசு தரப்பில் அறிவுறுத்தியும், 400 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் நடக்கிறது. கமிஷன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும் நெல் மூட்டைகளை எடுக்கின்றனர். ஒரு மூட்டைக்கு ரூ.50 என கட்டாயமாக லஞ்சமாக வசூலிக்கின்றனர். தற்போது 40 கிலோ கொண்ட நெல் மூட்டை சன்ன ரகம் ரூ.980க்கும், குண்டு ரகம் ரூ.920க்கும் எடுக்கின்றனர்.இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், 100 மூட்டைகள் வைப்பதற்கு கூட ஷெட் ஏதும் இல்லாமல் திறந்த வெளியில் வைக்கின்றனர். விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் திறந்த வெளிகளத்திலும், கொள்முதல் செய்த நெல் மூட்டைகள், அருகே உள்ள கருமாதி கொட்டகையிலும் அடுக்கி வருகின்றனர். சமதளமான இடமும் இல்லை, மின் விளக்கு இல்லை. விவசாயிகள் கருமாதி கொட்டகையில் இரவு காத்திருக்கும் நிலை உள்ளது. கொள்முதல் நிலையத்தில் இடவசதியின்றி தினசரி குறைந்தளவு நெல் கொள்முதல் செய்வதால், அறுவடை முடிந்து நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகள், திறந்த வெளியில் அடுக்கி வைத்து, ஒரு வாரம், 10 நாட்கள் காத்துக்கிடக்கின்றனர். தார்பாய் போட்டு மூடி வைத்தாலும், இரவு நேரங்களில் பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகிறது. கொள்முதல் செய்த நெல்லுக்கும் தொகை வழங்க ஒரு மாத காலம் தாமதம் செய்கின்றனர். சிலருக்கு இரண்டு மாதங்கள் தாண்டியும் கொள்முதலுக்கான பணம் வரவில்லை. நெல் கொள்முதல் செய்ய தாமதம் செய்வதால், பல விவசாயிகள் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் நெல்லை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.விவசாயிகளிடம் நெல்லை வாங்கும் சில வியாபாரிகள், இடைத்தரகர்கள் அதே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொடுத்து லாபம் சம்பாதிக்கின்றனர். இது குறித்து, கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை